Friday, February 5, 2010

எப்போதும் நான்

நினைவுகளூடே நடந்திருந்தேன்
எல்லா வாசல்களுக்குமான
பள்ளி நோக்கி
ஆலயம் தோறும் தேவனைத்
தேடித் தேடி
அலுப்புற்ற வேளையில்
மதமற்றிருந்தேன்
மீண்டும் மீண்டுமான
தேடலின் எல்லையில்
நின்று பார்க்கையில்
நித்தம் நித்தம்
நகராதிருந்த
அல்லது
நகர்ந்து கொண்டிருந்த
நனவோடை
ஓரத்தில்
மதமுற்றிருந்தேன்

Monday, January 25, 2010

நிதர்சனமானது

மிக வலுவான தூக்கமருந்து
என் கண்களில் கண்ணீர்
தோள்களைப் பிடித்துக் கொண்டேன்
கண்களில் தென்படும் அழகு,
இந்த அசுத்தம்.
சுத்தமானது.
இந்தச் சாவு உண்மையானது
இரண்டாவது முறையாக.
இதற்கு முன்னர் பேசியது
யாரோ வந்திருக்க வேண்டும்.
கைகளை நீட்டி அப்படியே
இறங்கி தெருவுக்கு முன்னால்
முதல் முறையாக
என் பார்வை சரியில்லை
சிறிது சிறிதாக கூட்டம்
கூடியது வண்டியில்
ஏறி விட்டேனா...
வண்டி என்மேல் ஏறியதா...
இந்தச் சாவு போலியானது.

Monday, January 18, 2010

தவறுகளின் காலம்

செய்யாதவற்றை எல்லாம்
செய்யாத தவறென்றால்
தவறு செய்யாதது தவறா?
தவறாகிப் போனது
செய்தது எல்லாம்.
இப்படியும்
இருக்க வேண்டியுள்ளது
சித்தப் பிரமையின்
சித்தமானது போல.
வேளா வேளைக்கான
உணவில் உறங்குகிறது,
பாழாய்ப் போகாத வேளை.
போதும் வேளையில்
பொழுது நிற்கிறது
நீட்சியான வாழ்வின்
வலது கரம் போல.

Thursday, January 14, 2010

புதிதாகக் கேள்விப் பட்ட ஒரு நாட்டுப்புறக் கதை

(கதையைச் சொன்னது : திருகுறுங்குடி கமலம்மாள்)

ஒரு நாள் மாலை வேளையில் சுப்புத்தாய் என்ற கிழவி தன் நண்பி செல்லத்தாயி கிழவியின் நாளை நான் ஒரு திருமணத்திற்கு போக வேண்டும்; உன்னுடைய பாம்படத்தை (ஒரு வகை தொங்கும் காதணி) தா. நான் போய்விட்டு வந்து தர்கிறேன் என்றாள். கிழவி உடனே தருவதற்காகக் கழற்றப் போனாள். உடனே இந்தக் கிழவி இப்போது வேண்டாம், இரவல் நகையை வீட்டில் வைக்க பயமாக இருக்கிறது. நாளை அதிகாலை வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிச் சென்று விட்டாள்.

***

நடு இரவில் கதவு தட்டப்பட பாம்படம் வாங்கிச் செல்ல கிழவி வந்துவிட்டாள் என நினைத்துக் கதைவைத் திறந்தாள். கிழவி நின்றிருந்தாள். பாம்படத்தைக் கழட்டி கையில் கொடுத்து விட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட கதவைத் திறந்தால், அதே கிழவி பாம்படத்தைக் கேட்டு நிற்கிறாள். இப்போதானே என் பாம்படத்தை வாங்கிச் சென்றாய் என முதல் கிழவி கேட்க, இரண்டாவது கிழவி என்ன உளறுகிறாய், நான் இப்போதானே வருகிறேன், நீ வேறு யாரிடமோ பாம்படத்தைக் கொடுத்து விட்டாய் போலிருக்கிறது என்கிறாள். எனவே முதல் கிழவி தன்னுடைய பாம்படத்தைத் தோழி கிழவி வேடத்தில் வந்து நடு இரவில் பேய் தான் வாங்கிச் சென்றிருக்கிறது என ஊகித்து இடுகாட்டுக்குப் பேயைப் பார்க்கச் செல்கிறாள்.

***

இடுகாட்டில் நிறைய பேய்கள் இந்தக் கிழவியின் பாம்படத்தை பந்து போல் ஒன்றுக்கொன்று தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கிழவி சற்று நேரம் கூர்ந்து கவனிக்கிறாள். பேய்கள் ஆடைகளற்று நிர்வாணமாக இருப்பதை உணர்கிறாள். உடனே தானும் தன் ஆடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகச் சென்று அந்தப் பேய்களோடு கலந்து கொண்டாள். ஒவ்வொரு பேயாக பாம்படத்தைப் போட்டு விளையாடும்போது இந்தக் கிழவியின் முறை வரும்போது, இவள் கைக்குப் பாம்படம் வருகிறது. உடனே பாம்படத்துடன் ஊரைப் பார்க்க ஓடி வந்து விட்டாள். விடிந்து விட்டதால் பேய்களால் கிழவியைப் பின் தொடர இயலவில்லை. கிழவி வீடு போய்ச் சேர்ந்தாள்.

அஸ்தமன வாசலில்

எதையும் இசைக்காத போதும்
உன்னிலிருந்து பீறிடுகிறது
உன்மத்தமான இசையின்
உயிர் ஒலி.
எல்லையில்லா வெளிகளில்
எரிந்து கொண்டிருக்கிறது
வெளிப்படுத்திய விசேடங்கள்
சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்
தன் கை தேடி
சீழ்பிடித்த உடலுடன்
ஒரு சமூக அவலர்
சட்டங்களெல்லாம் அறையபட்டுவிட்டன
மரச்சட்டங்களில்
நலத்திட்டங்களுக்காக
நகராத வரிசைகளில் நாட்கணக்கில்...
ஆனாலும்
மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு

நிசப்தம்

நாய்களுமற்ற நடுநிசியில்
நகர்ந்து கொண்டிருந்தான்.
சாலையோரத்தில்
சோமுப் பண்டாரமா?
நிலைத்த விழிகளில்
கடந்த காலம் கனிந்திருந்தது.

அசையாத் தவமிருக்கும்
அரசமரத்திண்டில்
இரவுக்கடையின் இறுதித்தட்டு
கழுவும் ஓசை
செல்லச்செல்ல, மெல்லமாய்த்
தேய்ந்தது.

சாக்கடையோரம் சலனமற்றுத்
தூங்கின
அரைப் பிறை வெளிச்சத்தில்
அவசரக் குழந்தைகள்.
சிறிய அசைவுகளுடன்
பெரிய குழந்தைகள்.

விடிந்து விடாதிருக்க
இரவை வேண்டின
விழிகளில் வண்ணம் மின்ன
ஒப்பாரில்லா ஒப்பாரியுடன்
இரட்டைப் பூனைகள்.

தவிக்கும் தவளைகளின் சத்தத்திற்கு
இடம் பெயர வழியறியா
வலம் புரிப் பிள்ளையார்,
கிரில்லில் சிக்கிய பெருச்சாளி
ரத்தம் பார்த்துக் கொண்டு.

எதிர் வரும் பிம்பமறியா
பிரமையுடன்
மௌனமாய் நடந்தான்
மௌனியின் நாயகன்.